7 Jan 2012

அமைதிப் புறாக்கள் எழுதும் மடல்




அமைதிப் புறாக்கள் எழுதும் மடல்
  -தமிழில் சமரன்

உலகத் தலைவர்களுக்கு!
      உக்ரைனின் செர்னோபில் அணு உலை விபத்து நடந்து 25 ஆண்டுகளும், மிகப்பெரிய அளவிலான நிலநடுக்கமும் சுனாமியும் ஜப்பானை சீர்குலைத்து இரண்டு மாதங்களே கடந்திருக்கும் நிலையில், இக்கடிதத்தில் கையொப்பமிட்டிருக்கும் அமைதிக்கான நோபல் பரிசினைப் பெற்றிருக்கும் நாங்கள், மரபு சாரா எரிசக்தியை பயன்படுத்த உங்களை ஈடுபடுத்திக் கொள்வதன் மூலம் பாதுகாப்பு மற்றும் அமைதியான எதிர்காலத்திற்கு முதலீடு செய்யுமாறு கேட்டுக்கொள்கிறோம். அணுசக்தியானது தூய்மையற்ற, பாதுகாப்பற்ற மற்றும் எளிதாகப் பெற முடியாத ஓர் ஆற்றல் மூலம் என்பதை அங்கீகரிப்பதற்கான தக்க தருணம் இதுவே!

புகுஷிமா அணு உலை விபத்தால் கதிர்வீச்சு பாதிக்கப்பட்டுள்ள காற்று, குடிநீர் மற்றும் உணவினை உட்கொண்டு மிக ஆபத்தான நிலையில் இருக்கும் ஜப்பானிய மக்களின் நிலை எங்களை ஆழமாக பாதித்துள்ளது. அணுசக்தியை பயன்படுத்துவதை இவ்வுலகம் கைவிடுமானால் ஏற்கனவே அதீத துன்பங்களை அனுபவித்துக் கொண்டிருக்கும் ஜப்பானிய மக்கள் சந்ததிகள் உட்பட உலகின் வருங்கால சந்ததிகள் எல்லாம் அமைதியுடனும் பாதுகாப்புடனும் வாழ்வார்கள் என நாங்கள் உறுதியாக நம்புகிறோம்.

செர்னோபில் அணு உலை விபத்து நடந்து 25 ஆண்டுகள் கடந்த பின்பு நிலைமை மேம்பட்டிருப்பதாக சிலர் கூறுகிறார்கள். நான் அதை மறுக்கிறேன்” என்கிறார் மைக்கோலோ இசேய். இவர் செர்னோபில் விபத்து நடந்த அணு உலைப் பகுதியை சுற்றியிருந்தவர்களை அப்புறப்படுத்தும் பணியில் இருந்தவர். “ எங்கள் குழந்தைகள் கதிர்வீச்சு கலந்த உணவினை உண்டு நோய்வாய்ப்பட்டிருக்கிறார்கள். எங்கள் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.” என்கிறார். விபத்து நடந்த ஜப்பானிய அணு உலையில் அப்புறப்படுத்தும் பணியில் இருந்தவரை தன்னுடன் தொடர்புபடுத்திக் கொண்டார் மைக்கோலோ இசேய்.

சுனாமி தனது முழு ஆற்றலையும் வாரியிறைத்துள்ள வடகிழக்கு கடற்கரையோர நகரங்களில் ஒன்றான கேசென்னுமா நகரின் ஒரு கடை உரிமையாளரின் வார்த்தைகளைக் கொஞ்சம் கவனியுங்கள்: “இந்த கதிர்வீச்சானது மிகப் பயங்கரமானது. அது சுனாமிக்கும் மேல். சுனாமியைக்கூட உங்களால் காண முடியும். ஆனால் இந்த கதிர்வீச்சை உங்களால் காணக்கூட முடியாது.”

மிகவும் துக்ககரமான எதார்த்தம் என்னவென்றால், ஜப்பானில் நடந்திருக்கும் அணுக் கதிர்வீச்சு கொடூரம் மீண்டும் வேறுபல நாடுகளில் ஏற்படக்கூடிய வாய்ப்பிருப்பதுதான். இதற்கு முன், 1986 இல் உக்ரைனின் செர்னோபில், 1976 இல் அமெரிக்காவின் மூன்றாம் மைல், 1957 இல் இங்கிலாந்தின் விண்ட்ஸ்கேல் ஆகியவற்றில் நடந்ததைப் போல. அணு உலை விபத்துகள் நிலநடுக்கம், சுனாமி போன்ற இயற்கை சீற்றஙகளாலோ, மனித பிழைகளாலோ கூட ஏற்படக்கூடும் வாய்ப்புள்ளது. உலகம் முழுவதிலிருக்கும் மக்களிடம், 
 பயங்கரவாதிகள் அணு உலைகளின் மீது தாக்குதல் நடத்தக்கூடுமென்ற அச்சமும் நிலவி வருகிறது.

அணு விபத்தில் கதிர் வீச்சானது ஒரு சாதாரண கவலை தரக்கூடிய நிகழ்வல்ல. அணுத் தொடர் வினையில் ஒவ்வொரு கண்ணியும் கதிர்வீச்சினை வெளியிடும் தன்மை கொண்டது. யுரேனிய கருவை துளைப்பதில் தொடங்கி தலைமுறை தலைமுறையாக கதிர்வீச்சு தொடர்ந்து இருந்து கொண்டே இருக்கும். ஏனெனில், ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு நச்சுத் தன்மை கொண்டிருக்கும் புளுட்டோனியத்தை அணுக் கழிவாகக் கொண்டிருக்கிறது. மிகப்பெரிய அணுசக்தி திட்டங்களைக் கொண்டிருக்கும் அமெரிக்கா போன்ற நாடுகள் கூட எத்தனையோ ஆண்டுகள் ஆய்வு செய்தும் எரிக்கப்பட்ட (அல்லது பயன்படுத்தப்பட்ட) அணு எரிபொருளை (spent nuclear fuel) பாதுக்காப்பாக புதைத்து வைப்பதற்கான தீர்வை அடைய முடியவில்லை. இதற்கிடையில் நாள்தோறும் எரிக்கப்பட்ட அணு எரிபொருளை உற்பத்தி செய்து கொண்டே இருக்கிறோம்.

அணுசக்தி திட்டங்கள் எல்லாம் அணு அயுதங்கள் தயாரிப்பதற்கான கதிர்வீச்சுத் தன்மைக் கொண்ட பொருளை வழங்குகின்றன என்ற உண்மையை எதிர்க்கொள்ள வேண்டும். உண்மையாகவே, ஈரானின் அணுத் திட்டங்களுக்கு உள்ளே புதைந்திருக்கும் கவலை அளிக்க்க்கூடிய விசயமும் இதுவே. தற்போது இயக்கத்திலுள்ள அணுத் தொழிற்சாலைகள் இந்த மிகப்பெரிய அபாயத்தை ஒதுக்கித்தள்ள எத்தனித்தாலும் அவை அவ்வளவு சாதாரணமாக விலகிச் செல்லாது. ஏனெனில் அவற்றின் முக்கியத்துவம் குறைத்தோ அல்லது ஒதுக்கித்தள்ளப்பட்டோ இருக்கின்றன.

தற்போது உலகில் இயங்கிக் கொண்டிருக்கும் 400 அணு உலைகளில் பெரும்பாலானவை இயற்கைச் சீற்றங்கள் மற்றும் அரசியல் கொந்தளிப்பு நிகழக்கூடிய பகுதிகளிலேயே அமைக்கப்பட்டுள்ளன. இந்த அணு உலைகள் உலகின் ஒட்டுமொத்த ஆற்றலின் தேவையில் 7 சதவீதத்தை மட்டுமே பூர்த்தி செய்கிறது. உலகத் தலைவர்களான நீங்கள் கூட்டாக செயல் படுவதன் மூலம் இந்த சிறு அளவிலான ஆற்றலை உடனடியாகப் பெறக்கூடிய, மிகவும் பாதுகாப்பான, எளிதாக பெறக்கூடிய மூலங்களால் பதிலீடு செய்து நம்மை எல்லாம் கார்பன் இல்லாத, அணுசக்தியற்ற எதிர்காலத்திற்கு நகர்த்த முடியும்.

தற்போது ஜப்பானில் நிகழ்ந்ததைப் போன்ற இயற்கைச் சீற்றங்களை நம்மால் தடுத்து நிறுத்த முடியாது. ஆனால் நாமனைவரும் இணைந்து நமக்குத் தேவையான சிறந்த ஆற்றல் மூலங்களைத் தெரிவு செய்ய முடியும்.

நம்மால் படிம எரிபொருள் மற்றும்  அணு ஆற்றலிலிருந்து வெளிவந்து தூய ஆற்றல் மூலங்களில் முதலீடு செய்ய முடியும். இது ஏற்கனவே நடந்து கொண்டும் இருக்கிறது. உலகளவில் அணுசக்தி தவிர்த்து, புதிய சக்தி மூலங்களான சூரிய ஆற்றல் மற்றும் காற்றாலைகளிலிருந்தும் கடந்த 5 ஆண்டுகளில் அதிகப்படியான ஆற்றல் பெறப்பட்டுள்ளது. சூரிய ஆற்றல், காற்றாற்றல் மற்றும் இதர மரபு சாரா எரிசக்தி மூலங்களிலிருந்து 2010 இல் 35% உலக வருமானம் பெறப்பட்டுள்ளது. இத்தகைய மரபு சாரா எரிசக்தி மூலங்களில் மூதலீடு செய்வது அதிகப்படியான வேலை வாய்ப்பினை உருவாக்கும்.

மரபு சாரா எரிசக்தி மூலங்கள் என்பது அமைதியான எதிர்காலத்திற்கான திறவு கோல்களில் ஒன்று. அதனால்தான், உலகில் இருக்கும் பெரும்பாலான மக்களில் குறிப்பாக இளைய தலைமுறையினர் அரசுகளின் நடவடிக்கைகளுக்கு காத்திராமல் தாங்களே இந்த திசையில் பயணிக்கத் தொடங்கிவிட்டனர்.

குறைந்த கார்பன், அணுசக்தியற்ற எதிர்காலத்திற்கு தம்மை ஈடுபடுத்திக் கொள்ளும் நாடுகள் தம்மை அணுசக்தியை புறந்தள்ளி மரபு சாரா எரிசக்தியை ஆதரிக்கும் – உலகில் வேகமாகவும் செல்வாக்குடனும் வளர்ந்து வரும் – உலக மக்கள் இயக்கத்துடன் தம்மை இணைத்துக்கொள்ள வழிவகுக்கும். இத்தகைய மக்கள் இயக்கங்களுடன் இணைந்து நமது எதிர்கால சந்ததியினரை மாத்திரமல்ல இந்த ஒட்டு மொத்த புவிக்கோலையும் பாதுகாக்கும் ஒரு வலுவான சகாப்தத்தை படைக்குமாறு தங்களை கேட்டுக்கொள்கிறோம்.

தங்கள் உண்மையுள்ள,

    பெட்டி வில்லியம்ஸ், அயர்லாந்து, (1976)
    மைரெட் மகுர், அயர்லாந்து, (1976)
    ரிகோபெர்டா மென்சு டம், குவாதிமாலா, (1992)
    ஜோடி வில்லியம்ஸ், அமெரிக்கா, (1997)
    செரின் எபாடி, ஈரான், (2003)
    வங்காரி மத்தாய், கென்யா, (2004)
    ஆர்க் பிஷ்ப். டெஸ்மான்ட் ட்டுட்டு, தென் ஆப்ரிக்கா, (1984)
    அடோல்ஃபோ ப்ரிஷ் எஸ்குய்வெல், அர்ஜென்டினா, (1980)
    அதிபர். ஜாஸ் ரமோஸ் ஹோடா, கிழக்கு திமோர், (1996)
    தலாய் லாமா (1989)










No comments:

Post a Comment